இரத்தினபுரி – வேவல்வத்தை பகுதியில் வாழும் தமிழ் மக்களை ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.
வேவல்வத்தை பகுதிக்கு கள விஜயத்தில் ஈடுபட்ட போதே அவர் மக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.
இரத்தினபுரி தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள், வாழ்வாதார பிரச்சினைகள் உள்ளிட்ட அனைத்து விதமான பிரச்சினைகள் தொடர்பிலும் எஸ்.ஆனந்தகுமார் அவதானம் செலுத்தியிருந்தார்.
தான் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றவுடன் இரத்தினபுரி தமிழர்களுக்கான உரிமைகளை வென்றெடுக்க முன்னின்று செயற்படுவதாக அவர் இதன்போது உறுதியளித்தார்.
அதனைத் தொடர்ந்து, கள பிரசார நடவடிக்கைகளையும் எஸ்.ஆனந்தகுமார் மேற்கொண்டிருந்தார்.
இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்தின் எல்லை பகுதியான பனில்கந்த பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்திலும் ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் எஸ்.ஆனந்தகுமார் கலந்துக்கொண்டிருந்தார்.
மலையகத்தில் ஒதுக்கப்பட்ட சமூகமாக வாழ்ந்துவரும் தாம், இதுவரை காலம் கவனீப்பாரற்று காணப்படுவதாக அந்த பிரதேச மக்கள் தமது கவலைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
ஏனைய தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கும் சிறிதளவு உரிமையேனும், இலங்கையின் தென் பகுதியில் வாழும் தமக்கு கிடைக்கவில்லை என அவர்கள் எஸ்.ஆனந்தகுமாரிடம் தெரிவித்தனர்.
தான் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்த தருணம் முதல் காணி உரிமைகளை இழந்திருக்கும் இரத்தினபுரி வாழ் தமிழ் மக்களுக்கும் காணி உரிமைகளை பெற்றுகொடுக்க முன்னின்று போராடுவதாக அவர் இதன்போது உறுதியளித்தார்.
இதன் ஒரு கட்டமாக 10 பர்சஸ் காணிகளை பகிர்ந்தளிக்கும் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த எண்ணியுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட வேட்பாளர் எஸ்.ஆனந்தகுமார் உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.