இராஜதந்திர பொறிமுறையிலும் ராஜபக்ச அரசு “பெயில்”

சர்வதேச அழுத்தங்களை அச்சமின்றி எதிர்கொள்ள முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அறிவித்துள்ள நிலையில், இராஜதந்திர பொறிமுறையிலும் தற்போதைய அரசு தோல்வி கண்டுள்ளது என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி விமர்சித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மையப்படுத்தி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கடந்த சனிக்கிழமை வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஸ்ட உப தலைவரான கபீர் ஹாசிம் எம்.பி. தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

” தேசிய பொருளாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு கட்டியெழுப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சூளுரைத்திருந்தார். ஆனால் எண்ணைய்க்குகூட நாட்டில் பாதுகாப்பு இல்லை. நெல் விலையை கட்டுப்படுத்தமுடியவில்லை. பொருட்களின் விலைகள் உச்சம் தொட்டுள்ளன.

மறுபுறத்தில் 21/4 தாக்குதல் தொடர்பில் பிரதான சூத்திரதாரி கண்டறியப்படவில்லை. மைத்திரிபால சிறிசேன நியமித்த ஆணைக்குழுவே செயற்பட்டது. ஆக தேசிய பொருளாதாரம் மற்றும் பாதுகாப்பு இரண்டிலுமே தோல்வி கண்ட இந்த அரசு, தற்போது இராஜதந்திர நகர்விலும் தோல்வியடைந்துள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்களிலும், தூதரகங்களிலும் தமக்கு நெருக்கமானவர்களையும், அமைச்சர்களின் உறவினர்களையும் நியமித்துள்ளது. அனுபவம் வாய்ந்தவர்கள் குறைவு. வெளிவிவகாரக் கொள்கை உரிய வகையில் முகாமை செய்யப்படாமையும் ஜெனிவாத் தோல்விக்கு ஓர் காரணமாகும்.” – என்றார்.

Related Articles

Latest Articles