இராவணன் இராஜ்ஜியம் எனக்கூறப்படுவது எல்லாம் கற்பனை கதையாகும். இராவணன் வாழ்ந்ததற்கான எந்தவொரு தொல்லியல் சான்றுகளும் கிடைக்கவில்லை என்று தொல்பொருளியல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் செனரத் திஸாநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” இராவணன் தொடர்பான கதையானது இலங்கைக்கு பலவந்தமாக திணிக்கப்பட்டதொன்றாகும். அவ்வாறு இல்லை என்பதை பலர் ஏற்பதில்லை. எனவே, தவறானதொரு இதிகாசத்தை சமுகமயப்படுத்தமுடியாது. அதனால்தான் இராவணன் தொடர்பான விடயத்தை நிராகரிக்கின்றேன். அதற்கு பல காரணங்களும் உள்ளன.
இராமாயணம் என்பது வீரக்காவியமாகும். அதில் எதிரியை எந்தளவுக்கு பலம்பொருந்தியவராக காட்டமுடியுமோ, அந்தளவுக்கு விபரிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக சினிமாப்படத்தில் வில்லனை பலமானவராக காண்பிப்பார்கள். இறுதியில் நடிகர் தனியாக சென்று நூறுபேரை அடக்குவார்.
இவ்வாறுதான் வீரக்காவியத்திலும் இராவணனை பலம்பொருந்தியவராக காண்பித்துள்ளனர்.
இரு தரப்பிலும் உயிரிழப்புகள் இடம்பெறக்கூடும் என்பதால் இரண்டு தடவைகள் ராமர் யுத்தத்தை நிராகரித்தார் என்றும், இராவணன் அதனை சவாலுக்குட்படுத்தியதாலேயே போர் இடம்பெற்றது எனவும் கூறப்படுகின்றது.
அனுமான் பாலம் அமைத்து வந்தார் என்றும், இராவணனிடம் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கி கப்பல்கள் உட்பட மேலும் பல சாதனங்கள் இருந்தன எனவும் கூறப்படுகின்றது. அத்துடன், கிரகங்களைக்கூட இராவணன் பிடித்தார் என நம்பப்படுகின்றது.
அவரிடம் இவ்வளவு சாதனங்கள், பலம் இருந்ததெனில், அனுமான் பாலம் அமைத்துவந்து, வாலால் தீமூட்டும்வரை அதனை ஏன் தடுக்கமுடியாமல்போனது?
நாட்டிலுள்ள தொல்பொருட்களில் அரைவாசிக்கும்மேல் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன.ஆனால், இதுவரையில் இராவணன் தொடர்பில் எமக்கு எந்தவொரு சாட்சியும் கிடைக்கவில்லை. குறிப்பாக இராவணனுக்கு தொடர்புடையது எனக்கூறப்படும் இடங்களில்கூட எந்த பொருளுட’ கிடைக்கவில்லை.
நாட்டு மக்கள் நாளாந்தம் கிணறு வெட்டுகின்றனர். விவசாயம் செய்கின்றனர். அவர்களுக்குகூட எந்தவொரு சான்றும் கிடைக்கவில்லை.” என்றார்