மாத்தளை மாவட்டத்தில் இறத்தோட்டை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெருந்தோட்டங்களில் லயன் குடியிருப்புகளில் சுவர்கள் மற்றும் கூரைகள் பழைமை காரணமாகவும் பராமரிப்பு இன்மையாலும் மழைக்காலங்களில் இடிந்து விழும் நிலையில் காணப்படுவதால் மக்கள் அச்சத்துடன் வாழ்வதாக இறத்தோட்டை பிரதேச சபையில் உறுப்பினர் எரோசன் சுகுமாரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த உறுப்பினர்,..
தற்போது அரசின் அபிவிருத்திக்கான நிதி ஒதுக்கீடு இல்லாததால் அதை திருத்திக் கொடுக்க முடியவில்லை. அத்தோடு குடியிருப்புகள் மிகவும் பழைமையானதாலும் முறையான பராமரிப்பின்மையினாலும் ஆபத்தான கட்டத்தில் இருக்கிறது. பிரதேச செயலகத்தினால் அனர்த்த முகாமைத்துவத்திற்கு உள்வாங்க முடியாத நிலையும் உள்ளது. அத்தோடு தோட்ட நிர்வாகமும் இந்த மக்களின் அசாதாரண சூழ்நிலை கருத்தில் கொண்டு எந்தவித பராமரிப்பு மற்றும் திருத்தும் செயற்பாடுகளை பல வருடங்களாக தொடர்ச்சியாக தட்டிக் கழித்து வருகின்றது. இங்கு வாழும் மக்களின் பொருளாதார சூழ்நிலை காரணமாகவும் அவர்களால் குடியிருப்புகளை திருத்திக் கொள்ள முடியாமலும் உள்ளது. மக்கள் கடும் மழை காலங்களில் பயத்தோடு உயிருக்கு அஞ்சி வாழ வேண்டிய சூழ்நிலை உள்ளதாக இறத்தோட்டை பிரதேச சபையில் உறுப்பினர் எரோசன் சுகுமாரன் சுட்டிக்காட்டி உள்ளார்.
