அண்மைய ஆண்டுகளில் குறைவடைந்துவரும் போக்கினையுடைய இறப்பர் உற்பத்தியானது 2019 இல் 74.8 மில்லியன் கி.கிறாம்களாக 9.5 சதவீதத்தால் மேலும் குறைவடைந்தது, இது வரலாற்றில் மிகக் குறைவான வருடாந்த வெளியீடாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இக்குறைவானது சிறு உடமையாளர் மற்றும் தோட்டத் தொழில் துறைகள் இரண்டிலும் பிரதிபலிக்கப்பட்டுள்ளதுடன் இது பிரதானமாக ஆண்டின் பிற்பகுதியின் மழைக்கால காலநிலை நிலைமைகளினால் பாலெடுக்கும் செயற்பாடுகளுக்கு ஏற்பட்ட இடையூறுகள் மற்றும் குறைந்த ஊதிய விலைகள் காரணமாக பாலெடுக்கும் செயற்பாடுகளைக் கைவிடுதல் என்பவற்றால் உந்தப்பட்டதாகும்.
மொத்த இறப்பர் உற்பத்தியில் ஏறத்தாழ 50 சதவீதத்திற்கு வகைகூறும் தட்டை இறப்பரின் உற்பத்தியின் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியால் இக்குறைவானது பிரதிபலிக்கப்பட்டது. அதன்படி, தட்டை இறப்பர் உற்பத்தி 2018இன் 41.3 மில்லியன் கி.கிறாம்களிலிருந்து 37.4 மில்லியன் கி.கிறாம்களாக 9.5 சதவீதத்தால் குறைவடைந்தது.
கிறேப் இறப்பர் உற்பத்தியும் 14.4 மில்லியன் கி.கிறாம்களாக 0.5 சதவீதத்தால் சிறிதளவான குறைவொன்றைப் பதிவுசெய்தது.
மொத்த இறப்பர் உற்பத்தியில் ஏறத்தாழ 30 சதவீதத்தை வகைகூறும் ஏனைய இறப்பர் வகைகளின் உற்பத்தியானதுமுன்னைய ஆண்டின் 26.8 மில்லியன் கி.கிறாம் உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் 22.9 மில்லியன் கி.கிறாம்களாக 14.3 சதவீதத்தால் குறைவடைந்தது.
2019 காலப்பகுதியில் இறப்பர் துறையின் குறைவான வெளியீடானது ஏற்றுமதியின் அளவைக் குறைத்துள்ளது. அதற்கிணங்க, இலங்கையின் இயற்கை இறப்பர் ஏற்றுமதி முன்னைய ஆண்டுடன் ஓப்பிடுகையில் 2019இ ல் 13.0 மில்லியன் கி.கிறாம்களாக 7.0 சதவீதத்தால் குறைவடைந்தது.
கடந்த சில ஆண்டுகளாகக் குறைவடைந்த கைத்தொழில் துறையில் இறப்பரின் உள்நாட்டு நுகர்வானது, இறப்பர் தொடர்பான உள்நாட்டு உற்பத்தித் துறையின் கட்டுப்படுத்தப்பட்ட செயலாற்றம் காரணமாக 113 மில்லியன் கி.கிறாம்களாக 16.8 சதவீதத்தால் மேலும் குறைவடைந்தது.
அதேவேளையில், 2019 இல் இறப்பரின் உற்பத்திச் செலவானது கி.கிறாமொன்றிற்கு ரூ.210.00 ஆக 2.4 சதவீதத்தால் அதிகரித்தது. இருப்பினும், கொழும்பு இறப்பர் ஏலத்தில் நாடாவாக்கப்பட்டு புகையூட்டப்பட்ட தட்டை இறப்பர் இல.1 மற்றும் லேட்டக்ஸ் கிறேப்பின் சராசரி விலைகள் முறையே கி.கிறாமொன்றிற்கு ரூ.288.51 மற்றும் கி.கிறாமொன்றிற்கு ரூ.302.32 ஆகக் காணப்பட்டன.
இதன் விளைவாக குறைவான இலாப எல்லை ஏற்பட்டு, பாலெடுக்கும் செயற்பாடுகள் மற்றும் உற்பத்தியாளர்களினால் இறப்பர் பயிர்ச்செய்கையில் மேலதிகமாக முதலிடுதல் என்பவற்றை மந்தப்படுத்துகின்றன.
உலகளாவிய பொருளாதார நடவடிக்கைகளின் மெதுவடைவு மற்றும் ஒப்பீட்டளவில் குறைவான பெற்றோலிய விலைகள் என்பவற்றின் கீழ் இயற்றை இறப்பருக்கான பன்னாட்டு மற்றும் உள்நாட்டுக் கேள்வி குறைவாகக் காணப்பட்டது.
இவ்வாண்டுப்பகுதியில் இயற்கை இறப்பர் இறக்குமதி 50.0 மில்லியன் கி.கிறாம்களில் 24.0 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்தது. இருப்பினும், ஒப்பீட்டளவில் குறைவான உலகளாவிய எண்ணெய் விலைகள் காரணமாக செயற்கை இறப்பர் இறக்குமதி 64.0 மில்லியன் கி.கிறாம்களாக 2.1 சதவீதத்தால் அதிகரித்தது.