ஜனாதிபதி தேர்தலுக்குரிய பிரச்சார நடவடிக்கைகள் யாவும் நாளை மறுதினம் (18) நள்ளிரவுடன் ஓய்வுபெறவுள்ளது. இந்நிலையில் கடைசி பிரச்சாரக் கூட்டத்தை பிரமாண்டாகவும், வெற்றிகரமாகவும் நடத்தி முடிப்பதற்கு பிரதான அரசியல் கட்சிகள் தயாராகிவருகின்றன.
அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் கூட்டணிகளின் தலைவர்களெல்லாம் கடைசி கூட்டத்தில் ஒன்றாக பங்கேற்பதால் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாட்டுக்குரிய வியூகங்களும் வகுக்கப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோரின் கடைசி தேர்தல் பிரசாரக் கூட்டம் கொழும்பு மாநகர எல்லையை மையப்படுத்தியதாக அமையவுள்ளது.
அதேவேளை ஜனாதிபதி தேர்தல் நிலைவரம் தொடர்பில் வெளிநாட்டு உளவு அமைப்புகளும் களத்தில் இறங்கி தீவிரமாக செயற்பட்டுவருதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க, இந்திய கூட்டணிக்கும், சீனாவுக்கும் இலங்கை தேர்தல் முக்கியத்துவம் மிக்கதாகக் கருதப்படுகின்றது.
நாடளாவிய ரீதியில் 13 ஆயிரத்து 421 வாக்களிப்பு நிலையங்களில் செப்டம்பர் 21 ஆம் திகதி காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.மாலை 6 மணி முதல் வாக்கெண்ணும் பணி இடம்பெறும்.
