இலங்கை கால்பந்தாட்ட அணி ஜனாதிபதியுடன் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணிக்கும் இடையிலான சந்திப்பு நேற்று முன்தினம்(26) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

கொழும்பு குதிரைப் பந்தயத் திடலில் நடைபெற்ற நான்கு நாடுகளுக்கு இடையிலான கால்பந்தாட்டப் போட்டியில் பூட்டானுக்கு எதிராக இலங்கை கால்பந்தாட்ட அணி அபார வெற்றியீட்டியதோடு வெற்றியீட்டிய இலங்கை அணி வீரர்களுக்கு ஜனாதிபதி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அடுத்த வருடம் நடைபெறவுள்ள தெற்காசிய கால்பந்தாட்டப் போட்டியில் (SAFF) வெற்றிபெறுவதற்கு இலங்கை கால்பந்தாட்ட அணியை ஊக்குவித்த ஜனாதிபதி, கால்பந்தாட்டத்திற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதாக உறுதியளித்தார்.

கடந்த சில மாதங்களாக இலங்கையில் கால்பந்தாட்டத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள தோடு இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனம் (FFSL) தற்போது உலகின் பல்வேறு நாடுகளில் தொழில்முறை போட்டிகளில் விளையாடும் இலங்கை வீரர்களைக் கொண்டு வலுவான தேசிய அணியை உருவாக்கியுள்ளது.

வீரர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடிய ஜனாதிபதி அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார். இதன் போது இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமார் ஜனாதிபதிக்கு நினைவுப் பரிசொன்றை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியின் பிரதான பயிற்றுவிப்பாளர் எண்டி மொரிசனும் கலந்து கொண்டார்.

Related Articles

Latest Articles