இலங்கை பௌத்த நாடென்பதை தமிழ் அரசியல்வாதிகள் ஏற்கவேண்டும். பௌத்தர்களின் பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினரான முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் மேலும் கூறியவை வருமாறு,
“இலங்கை பௌத்த நாடென்பதை கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிறிதரன் உள்ளிட்டோர்கள் புரிந்துகொள்ள வேண்டும்: இதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
திஸ்ஸ விகாரையில் எமது பௌத்த மக்களுக்குரிய வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகின்றது. அதற்கு எதிராக கஜேந்திரகுமாரின் ஆட்கள் வந்து போராட்டம் நடத்துகின்றனர்.
ஆனால் இவர்கள் கொழும்புக்கு வந்து சுதந்திரமாக கோவிலுக்கு செல்லும் நிலை காணப்படுகின்றது. இலங்கை பௌத்த நாடென்பதால்தான் இது சாத்திப்படுகின்றது.
இலங்கையில் வேறொரு மதம் பெரும்பான்மையாக இருந்திருந்தால், அந்த மதத்துக்கு எதிராக செயல்பட்டுவிட்டு சுதந்திரமாக இருக்க முடியுமா?
பௌத்த தர்மம் ஊடாக வழங்கப்பட்ட போதனைகளால்தான் பொறுமை காக்கின்றோம். ஆனால் அந்த பொறுமைக்கும் ஓர் எல்லையுண்டு என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
அரசமைப்பின் 9 ஆவது சரத்தில் பௌத்த சாசனத்தை காக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எனினும், அரசமைப்பை மீறும் வகையிலேயே திஸ்ஸ விகாரை விடயத்தில் நடவடிக்கை இடம்பெறுகின்றது.” – என்றார் சரத்வீரசேகர.
