இலங்கை வரும் ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் மலையகம் குறித்தும் ஆராய்வார்!

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் , வடக்குக்கும் நேரில் சென்று நிலைமைகளை ஆராயவுள்ளார்.

இதன்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

அத்துடன், மலையக மக்களின் நிலை பற்றியும் இலங்கை பயணத்தின்போது அவர் அவதானம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க், எதிர்வரும் 23 ஆம் திகதி கொழும்பு வருகின்றார்.
26 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கி இருக்க திட்டமிட்டுள்ள அவர், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய , வெளிவிவகார அமைச்சர், நீதி அமைச்சர் உட்பட அரச தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களையும் கொழும்பில் சந்திப்பாரென எதிர்பார்க்கப்படுகின்றது.

அத்துடன், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் சிவில் அமைப்புகளின் செயற்பாட்டாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் ஆகியோரையும் இவ்விஜயத்தின்போது ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் சிறுபான்மை கட்சிகளின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயல்பாட்டாளர்கள் என பல தரப்பு கலந்துரையாடலையும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மலையக சிவில் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பின்போது, மலையக மக்கள் பற்றி கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது.

அதேவேளை, யாழ்ப்பாணம ; மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நேரில் சென்று, நிலைமைகளை ஆராய உள்ளதுடன், போரின் போது வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்திக்கவுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் செப்டம்பர் மாத கூட்டத்தொடரில் இலங்கை குறித்து வலுவானதொரு தீர்மானம் பிரித்தானியா தலைமையில் முன்வைக்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராக பதவி வகித்த நவநீதம்பிள்ளை அம்மையார், இதற்கு முன்னர் இலங்கை வருகை தந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்போது அவர் முள்ளிவாய்க்கால் செல்வதற்கு முற்பட்டார் எனவும், அந்த கோரிக்கையை மஹிந்த அரசாங்கம் நிராகரித்தது எனவும் அப்போது தகவல்கள் வெளியாகின.

Related Articles

Latest Articles