” சந்திராயன் 1, 2, 3 என மூன்று திட்டங்களுக்கும் இந்தியாவால் 263 மில்லியன் அமெரிக்க டொலர்களையே செலவளிக்கப்பட்டுள்ளது. ஆனால்
சுப்ரீம் செட் வன் (Supreme SAT I) இற்காக இலங்கை 320 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளது. இது தொடர்பில் நாடாளுமன்றத்துக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்கு சபாநாயகர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.”
இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று (24) வலியுறுத்தினார்.
நாடாளுமன்றம் இன்று முற்பகல் பிரதி சபாநாயகர் தலைமையில் கூடியது. இதன்போது இவ்விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர்,
” சந்திரயான்-1, சந்திரயான்-2, சந்திரயான்-3 என மூன்று முயற்சிகளை முன்னெடுத்து இந்தியா அதில் இன்று வெற்றிகண்டுள்ளது. 2008, 2019 மற்றும் 2023 காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட இந்த மூன்று செயல் திட்டங்களுக்கும் 263 மில்லியன் அமெரிக்க டொலர்களே செலவிடப்பட்டுள்ளது.
ஆனால் எமது நாட்டில், 2012 இல் சுப்ரீம் செட் வன் திட்டத்தை செயற்படுத்துவதற்கு 320 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது.
எனவே, இந்த 320 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் விசாரணை நடத்தி நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சபாநாயகரிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
இந்த நிதியை பயன்படுத்தி நிலவுக்கு அல்ல நாட்டை படுகுழிக்குள் கொண்டுசென்றுள்ளனர். ” எனவும் சஜித் குறிப்பிட்டார்.










