கொழும்பு, ஆட்டுபட்டித்தெருவில் பெண்ணொருவரை பெற்றோல் ஊற்றி கொளுத்திய சந்தேகநபர் ஆட்டுப்பட்டி தெரு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 10 ஆம் திகதி முற்பகலே இக்கொடூரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எரி காயங்களுக்கு உள்ளான 27 வயது பெண் கொழும்பு வைத்தியசாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
பாதிக்கப்பட்ட பெண் திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பதோடு இரு பிள்ளைகளின் தாயாவார். இப்பெண் குறித்த நபருடன் தொடர்பை பேணி வந்துள்ளார் என தெரியவருகின்றது.
சந்தேக நபர் குறித்த பெண்ணை ஆட்டோவில் வைத்து அவர் மேல் பெற்றோல் ஊற்றி தீ வைத்த நிலையில் பாதிக்கப்பட்ட பெண் அலறிக்கொண்டு வீதிக்கு வந்து வீழ்ந்துள்ளார்.
பின்னர் பிரதேசவாசிகள் பாதிக்கப்பட்ட பெண்ணை கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றுள்ளனர்.
சந்தேக நபர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பதோடு அவர் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் பணம் கேட்டும் அதை அவர் கொடுக்காததால் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் பாதிக்கப்பட்டவரது பெற்றோர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
பிரதேசத்தை விட்டு தப்பிசென்ற நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
