மாகாணசபைகளுக்குரிய தேர்தலை இவ்வருடத்துக்குள் நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும், முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய.
கொழும்பில் நடந்த கருத்தரங்கொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார்.
” நாட்டில் கடந்த 11 வருடங்களாக மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. எனினும், உள்ளாட்சிசபைத் தேர்தல் முடிந்த பின்னர், மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என அனைத்துக் கட்சிகளும் வலியுறுத்திவருகின்றன.
ஆளுநர்களின்கீழ்தான் மாகாணசபை செயற்படுகின்றது. ஆனால் அந்த அதிகாரம் மக்கள் பிரதிநிதிகள் வசம் இருக்க வேண்டும். குறிப்பாக நிர்வாகம் ஆளுநர் வசம் இருப்பது வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
மாகாணசபைத் தேர்தல் பற்றி தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் உறுதியளிக்கப்பட்டுள்ளது. அதற்குரிய நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, சிறியதொரு அரசமைப்பு மறுசீரமைப்பு ஊடாக அத்தேர்தலை நடத்த முடியும். இவ்வருடத்துக்குள் அதனை நடத்துமாறு கோரிக்கை விடுக்கின்றோம்.” – எனவும் கரு ஜயசூரிய மேலும் குறிப்பிட்டார்.