இனப்படுகொலையில் ஈடுபடும் இஸ்ரேலுக்கு இலவச விசா வழங்கும் வகையிலேயே தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் வெளிவிவகாரக் கொள்கை அமைந்துள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபூர் ரஹ்மான் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் மேலும் கூறியவை வருமாறு,
” பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டுவருகின்றது. பலம்பொருந்திய நாடுகள்கூட தற்போது இஸ்ரேலை எதிர்த்துவருகின்றன. இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்திவருகின்றன. இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுகின்றது என உலக நாடுகள் ஏற்க ஆரம்பித்துள்ளன. எனினும், இஸ்ரேலியர்களுக்கு இலங்கை இலவச விசா வழங்கியுள்ளது.
இலங்கையானது பாலஸ்தீன விடுதலைக்காக தொடர்ந்து முன்னிலையாகி வந்துள்ளது. அனைத்து ஆட்சியின்கீழும் வெளிவிவகாரக் கொள்கையில் இவ்விடயம் முக்கிய விடயமாக இருந்தது. எனினும், அநுரகுமார திஸாநாயக்க அரசானது இஸ்ரேலுக்காக முன்னிலையாகும் நாடாக இலங்கையை மாற்றியுள்ளது.
எதிரணியில் இருக்கும்போது பாலஸ்தீனத்துக்காக ஜே.வி.பியினர் குரல் கொடுத்தனர். போராட்டங்களை நடத்தினர். இப்படியான வரலாற்றைக்கொண்ட ஜே.வி.பி., எவ்வித வெட்கமும் இன்றி இனப்படுகொலையில் ஈடுபடும் இஸ்ரேலுக்கு இலவச விசா வழங்கியுள்ளது. இந்த அரசின் வெளிவிவகாரக் கொள்கைதான் என்ன?” – என்றார்.