ரபா எல்லையில் தஞ்சமடைந்துள்ள பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், இந்த தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்கு உத்தரவிட வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றத்தை தென்னாப்பிரிக்கா நாடியுள்ளது.
எகிப்துக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே இருக்கும் எல்லை பகுதியான ரபாவில் லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
காசா உள்ளே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதால், பாலஸ்தீன மக்கள் ரபா நோக்கிதான் நகர்ந்தனர். இந்த பகுதியில் இஸ்ரேல் தாக்குதலை தற்போது தொடங்கியுள்ளது.
இங்கு மொத்தம் 10-15 லட்சம் பாலஸ்தீன மக்கள் இருக்கிறார்கள். இவர்கள் இங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் இராணுவம் வலியுறுத்தி வருகிறது. ஆனால் தற்போது வரை வெறும் 3 லட்சம் பேர் மட்டுமே வெளியேறியுள்ளனர். ஆனால் இதைப்பற்றியெல்லாம் கண்டுக்கொள்ளாமல், இஸ்ரேல் போரை தீவிரப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேலின் இந்த ரபா தாக்குதலை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று சர்வதேச நீதிமன்றத்தில தென்னாப்பிரிக்கா வலியுறுத்தியுள்ளது.
காசா போர் தொடங்கிய உடனேயே இதனை எதிர்த்து தென்னாப்பிரிக்கா நீதிமன்றத்தை நாடியிருந்தது. போருக்கு தீர்வு காண வேண்டும் என்பது மட்டுமே தென்னாப்பிரிக்காவின் கோரிக்கையாக இருந்தது. ஆனால் தற்போது முதன் முறையாக போர் நிறுத்தம் குறித்து தென்னாப்பிரிக்கா வலியுறுத்தியுள்ளது. “உடனடியாக போர் நிறுத்தம் குறித்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும். அல்லது போர் முனைக்கு சென்று உடனடியாக இஸ்ரேலின் தாக்குதுலை நிறுத்துங்கள்” என நீதிமன்றத்திடம் தென்னாப்பிரிக்கா கடுமையாக வாதிட்டுள்ளது.