இஸ்ரேல்மீது ஹமாஸ் மீண்டும் தாக்குதல்

இஸ்ரேலின் டெல் அவிவ் மீது நேற்றிரவு ஹமாஸ் அமைப்பு ராக்கெட்களை வீசி தாக்குதல் நடத்திய நிலையில், இஸ்ரேல் இராணுவம் இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறது. இதில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 07 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஏவுகணைகளை வீசி ஹமாஸ் தாக்குதல் நடத்தியது.

இதற்கு பதிலடி கொடுப்பதாக கூறி 200 நாட்களுக்கும் மேலாக இஸ்ரேல் இராணுவம், காசாவில் உள்ள பாலஸ்தீன மக்கள் மீது தாக்குதலை தொடுத்து வருகிறது. இதில் 35 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் சமீபத்தில் உச்சத்தைத் தொட்டிருக்கிறது. சில நாட்களுக்கு முன்னர் ஐ நா பணியாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதலை நடத்தியது. இதில் 7 பேர் கொல்லப்பட்டனர்.

எனவே உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும் என்று உலக நாடுகள் தீவிரமாக வலியுறுத்த தொடங்கின. இது நாள் வரை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற அமெரிக்கா கூட, உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

போர் காரணமாக காசாவுக்குள் நிவாரண பொருட்கள் எதுவும் வரவில்லை. இதனால் உணவுக்கும், குடிநீருக்கும் பஞ்சம் ஏற்பட்டிருக்கிறது. நோயாளிகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் உணவு கிடைக்காமல் அடுத்தடுத்து உயிரிழந்தனர். தொற்று நோய் பாதிப்புகளும் தீவிரமடைந்துள்ளன.

மறுபுறம் இந்த போரை எதிர்த்தும், போரில் இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்காவின் நிலைப்பாட்டை எதிர்த்தும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் சூடுபிடித்துள்ளன. அமெரிக்காவில் மட்டும் 50க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றிரவு இஸ்ரேலின் டெல் அவிவ் மீது ஹமாஸ் அமைப்பு ராக்கெட்களை வீசி தாக்குதலை நடத்தியிருக்கிறது. எனவே இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில், 35 பேர் பலியாகியுள்ளனர்.

ரபா எல்லையில் தஞ்சமடைந்துள்ளவர்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இந்த தாக்குதலுக்கு பாலஸ்தீன அரசு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

Related Articles

Latest Articles