இடைக்கால ஜனாதிபதி பதவிக்கு, தற்போதைய பதில் ஜனாதிபதி பதவி வகிக்கும் ரணில் விக்ரமசிங்கவே பொருத்தமானவராக இருப்பார் என தாம் நம்புவதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்வுக்கான போட்டியில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்டால் அவரையே தாம் ஆதரிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்வுக்கான விடயம் தொடர்பில் சஜித் பிரேமதாச என்னுடன் பேசியிருந்தார். அதன்போது அவர் என்னை தனது தந்தையின் நண்பர் என்றும் தனக்கு குறித்த ஜனாதிபதி தேர்வின்போது ஆதரவு தருமாறும் கோரியிருந்தார்.
ஆனால் நான் கருத்தில் எடுப்பதாக தெரிவித்திருந்தபோதிலும் , ரணில் விக்ரமசிங்கவையே ஆதரிக்கவுள்ளேன்.
மேலும் போராட்டக்காரர்கள் தங்களது நிலைமையை உணர்ந்து அமைதிவழியில் இந்த பிரச்சினையை சமாளிக்க எண்ணுகின்றனர். இது குறித்து பதில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடி எனது கருத்தையும் அவரிடம் முன்வைத்திருந்தேன். குறிப்பாக குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களின் போராட்டத்தில் முன்வைக்கும் நியாயத் தன்மைக்கு ஏற்ப தீர்வு காணப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தேன்.
அதற்கு அவர் அதைத்தான் தானும் எண்ணியிருப்பதாகவும் 20 ஆம் திகதி பாராளுமன்றில் தான் எஞ்சிய காலத்திற்கான ஜனாதிபதியாக நியமனமானால் அவர்களை அழைத்து பேசவுள்ளதாகவும் டக்ளஸ் குறிப்பிட்டுள்ளார்.
