ஈராண்டுகளில் புதிய அரசியலமைப்பு!

புதிய அரசியலமைப்பை இயற்றும் பணியை ஈராண்டு காலப்பகுதிக்குள் நிறைவுசெய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் உத்தேசித்துள்ளது என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் ஊடாக தற்போது அமுலில் இருக்கும் 19 ஆவது திருத்தச்சட்டம் நீக்கப்பட்ட பின்னர், புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது என அரச உயர்மட்ட வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

அரசியலமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தை நீக்குவதற்கான 20ஆவது திருத்தச்சட்டமூலத்தின் உத்தேச வரைவு எதிர்வரும் 19 ஆம் திகதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முன்வைக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

20 ஆவது திருத்தச்சட்டமூலத்தின் பிரகாரம் சுயாதீன ஆணைக்குழுக்கள் இல்லாது செய்யப்படமாட்டாது எனவும் அவற்றில் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அத்துடன், காணாமல்ஆக்கப்பட்டோர் பணியகம் தொடர்பிலும் சில சட்ட திருத்தங்கள் இதன் 20 ஊடாக மேற்கொள்ளப்படும் எனவும் தெரியவருகின்றது.
19 ஆவது திருத்தச்சட்டம் வருவதற்கு முன்னர் ஜனாதிபதியின் பதவி காலம் 6 வருடங்களாக இருந்தது.

அத்துடன், ஜனாதிபதியொருவர் இரண்டு தடவைகள் மாத்திரமே அப்பதவியை வகிக்கலாம் என்ற வரையறையும் 18 ஊடாக இல்லாமல் செய்யப்பட்டது.
எனவே, 19 நீக்கப்பட்டாலும் ஜனாதிபதியின் பதவிகாலம் 5 ஆகவே இருக்கும் எனவும், ஜனாதிபதி பதவியை நபரொருவர் இரண்டு தடவைகள் மட்டுமே வகிக்கலாம் எனவும் வலியுறுத்தும் சரத்துகளும் இணைக்கப்படவுள்ளன.

அதேவேளை, 19 ஐ இல்லாதொழித்த பின்னர் ஜனாதிபதியால் அமைச்சு பதவிகளை வகிக்கமுடியும் என்பதுடன், இரட்டை குடியுரிமை கொண்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிடக்கூடிய சூழ்நிலையும் உருவாகும்.

Related Articles

Latest Articles