ஈரான் அரசாங்கத்தைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கான புதிய முயற்சிகள் குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் ஞாயிற்றுக்கிழமை கலந்துரையாடியதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
“ஈரான் ஆட்சியை முற்றாக அகற்றும் நடவடிக்கையை நிறைவு செய்வதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்” என நெதன்யாகு அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக ட்ரம்புடன் பலமுறை கலந்துரையாடியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத், எவருக்கும் முன்கூட்டியே அறிவிக்கப்படாத இஸ்ரேல் விஜயமொன்றை திங்கட்கிழமை மேற்கொண்டு, நெதன்யாகுவைச் சந்தித்து ஈரான் தொடர்பாகக் கலந்துரையாடியுள்ளார்.
தெற்கு நெகேவ் பாலைவனப் பகுதியில் அமைந்துள்ள உவ்டா விமானப்படைத் தளத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக, இஸ்ரேல் பிரதமரின் பேச்சாளர் டோரன் ஸ்பீல்மன் உறுதிப்படுத்தியுள்ளார்.
பிராந்தியத்தில் நிலவும் அச்சுறுத்தல்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதில் அமெரிக்கா–இஸ்ரேல் இடையிலான கூட்டாண்மை குறித்து இருவரும் கலந்துரையாடியதாக அவர் ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, பிராந்திய அச்சுறுத்தல்களுக்கு எதிராகத் தாக்குதல் மற்றும் தற்காப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்தும் பேசப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளரின் இஸ்ரேல் விஜயம் தொடர்பாக அமெரிக்கப் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை.










