உக்ரைனை கைவிட்டது அமெரிக்கா: நேசக்கரம் நீட்டியது ஐரோப்பா!

உக்ரைனுக்கு வழங்கிய ஆயுத உதவிகளை அமெரிக்கா திடீரென நிறுத்தி உள்ளது. எனினும் பிரிட்டன், பிரான்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.

2022 பெப்ரவரி முதல் ரஷ்யா, உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருகிறது. அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைனுக்கு தேவையான ஆயுத உதவிகளை வழங்கி வந்தார்.

கடந்த ஜனவரியில் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற ட்ரம்ப், உக்ரைனுக்கான ஆயுத உதவிகளை படிப்படியாக நிறுத்தி வந்தார்.

இந்த சூழலில் கடந்த வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின்போது அமெரிக்க ஜனரிதிபதி ட்ரம்ப், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி இடையே பகிரங்கமாக மோதல் ஏற்பட்டது. இதன் காரணமாக உக்ரைனுக்கான ஆயுத உதவிகள் திடீரென நிறுத்தப்பட்டு உள்ளன.

அமெரிக்கா கைவிட்ட நிலையில் தற்போது உக்ரைனுக்கு ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அந்த நாட்டுக்கு தேவையான ஆயுத உதவிகளை பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து வழங்கி வருகின்றன.

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி லண்டனில் நேற்று முன்தினம் பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரை சந்தித்தார். இதைத் தொடர்ந்து பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் அவசர கூட்டம் லண்டனில் நேற்று நடைபெற்றது. இதில் ஜெலன்ஸ்கியும் பங்கேற்றார்.

இந்த கூட்டத்தில் ட்ரம்ப் – ஜெலன்ஸ்கி மோதல் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

Related Articles

Latest Articles