உக்ரைன் செல்லும் கப்பல்களுக்கு ரஷ்யா எச்சரிக்கை

உக்ரைன் துறைமுகங்களை நோக்கி செல்லும் கப்பல்கள் இராணுவ இலக்குகளாக கருதப்படும் என்று ரஷ்யா எச்சரித்த நிலையில் உலக சந்தையில் கோதுமை விலை வேகமாக அதிகரித்துள்ளது.

உக்ரைனிய தானியங்கள் கருங்கடல் வழியாக பாதுகாப்பாக பயணிப்பதை உறுதி செய்யும் ஒப்பந்தத்தில் இருந்து ரஷ்யா இந்த வாரம் வெளியேறியது.

இந்நிலையில் பொதுமக்கள் கப்பல்கள் மீதான தாக்குதல்களுக்கு உக்ரைன் மீது குற்றம் சுமத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் குற்றம் சாட்டினார்.

எனினும் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் பட்சத்தில் இந்தத் தானிய உடன்படிக்கைக்கு திரும்ப முடியும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டி தெரிவித்துள்ளார். இதில் ரஷ்யாவின் விவசாய வங்கியை உலகளாவிய கொடுப்பனவு அமைப்பு ஒன்றில் இணைக்கும் கோரிக்கையும் உள்ளடங்கும்.

இந்நிலையில் உக்ரைனின் துறைமுக நகரான மைகொலைவ் மீது ரஷ்யா கடந்த புதன் (19) இரவு நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் 18 பேர் காயமடைந்துள்ளனர். மற்றொரு துறைமுக நகரான ஒடெசாவிலும் தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

இதேவேளை ஐரோப்பிய பங்குச் சந்தையில் கோதுமை விலை முந்தைய நாளிலிருந்து புதன்கிழமை 8.2 வீதம் உயர்ந்து, ஒரு தொன்னுக்கு 253.75 யூரோ ஆக இருந்ததோடு சோளத்தின் விலை 5.4 வீதம் அதிகரித்துள்ளது.

அமெரிக்காவில் கோதுமை விலை புதனன்று 8.5 வீதமாக உயர்ந்ததோடு உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து அதிக உச்ச தினசரி அதிகரிப்பாக இது இருந்தது.

ரஷ்ய தாக்குதல்களில் 60,000 தொன் தானியங்கள் அழிந்து தானிய ஏற்றுமதி உட்கட்டமைப்புகளில் கணிசமான சேதம் ஏற்பட்டிருப்பதாக உக்ரைன் விவசாயத்துறை அமைச்சர் மைகோலா சொல்ஸ்கி தெரிவித்துள்ளார்.

ரஷ்யா கடந்த செவ்வாய்க்கிழமை தானிய உடன்படிக்கையில் இருந்து வாபஸ் பெற்று சில மணி நேரங்களின் பின் உக்ரைனிய துறைமுகங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles