உக்ரைன் தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயாா் – ரஷ்யா விசேட அறிவிப்பு

உக்ரைன் இராணுவம் தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷ்ய படைகள் உக்கிரமான தாக்குதலை இரண்டாவது, நாளாகவும் நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷ்ய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் எழுந்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷ்ய படைகள், சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

கீவ்வில் இருந்து 3 மைல் தொலைவில் ரஷ்ய படைகள் முன்னேறி வருவதாகவும் உக்ரைன் இராணுவம் தெரிவித்தது. ரஷ்ய படைகளின் தாக்கம் தீவிரம் அடைந்து வரும் நிலையில், தெருவெங்கும் சைரன்களை ஒலித்து மக்களைப் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு உக்ரைன் அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்த நிலையில், உக்ரைன் இராணுவம் தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இதுபற்றி கூறுகையில், “ அடக்குமுறையில் இருந்து உக்ரைனை மீட்பதே எங்களின் நோக்கம். உக்ரைன் இராணுவம் சண்டையை நிறுத்தினால் நாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயார்” என்றார்.

Related Articles

Latest Articles