“ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மீதான எந்தவொரு தாக்குதலும் ஈரானுக்கு எதிரான முழுமையான போருக்குச் சமம். எனவே, உரிய பதிலடி கொடுக்கப்படும்.”
இவ்வாறு ஈரான் ஜனாதிபதி, அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானின் வெடித்துள்ள போராட்டங்களில் இதுவரை சுமார் 500 பாதுகாப்புப் படையினர் உட்பட 5 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களை கைது செய்து ஈரான் அரசு மரண தண்டனை விதித்து வருகிறது. இதற்கு பல நாடுகளும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இது குறித்து அளித்த பேட்டியில்,
“ ஈரானில் புதிய தலைமையைத் தேட வேண்டிய நேரம் இது. 800க்கும் மேற்பட்டோரின் மரண தண்டனையை அவர்கள் இரத்து செய்தனர். அவர்கள் ரத்து செய்ததை நான் மிகவும் மதிக்கிறேன்.
இதன் காரணமாக ஈரான் விவகாரத்தில் அமெரிக்க தலையீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் தொடர்ந்து கொல்லப்பட்டாலோ அல்லது தூக்கிலிடப்பட்டாலோ அமெரிக்கா தலையிட வாய்ப்பு உள்ளது ” என்று கூறினார்.
இதையடுத்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் “ஒரு குற்றவாளி” என்று ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கூறியுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகள் மற்றும் கலகக்காரர்கள் தான் ஈரானில் பல ஆயிரம் இறப்புகளுக்கு காரணம் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தநிலையில் ஈரான் ஜனாதிபதி பெஷேஷ்கியன் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில் ,
“ எந்தவொரு அநீதியான ஆக்கிரமிப்புக்கும் ஈரானின் பதிலடி கடுமையானதாகவும் வருந்தத்தக்க வகையிலும் இருக்கும்.
உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி மீதான எந்தவொரு தாக்குதலும் ஈரானுக்கு எதிரான முழுமையான போருக்குச் சமம்.
ஈரானின் பொருளாதார நெருக்கடிகளுக்கு அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தான் காரணம்.
நீண்டகால விரோதமும் மனிதாபிமானமற்ற பொருளாதார தடைகளும் ஈரானிய மக்கள் எதிர் கொள்ளும் சிரமங்களுக்கு ஒரு முக்கிய காரணம்.” – என்றார் ஈரான் ஜனாதிபதி.










