“மூன்றாம் உகலப்போர் இடம்பெற்றுவருகின்றது. எனவே, பூகோள அரசியலில் கேந்திர முக்கியத்துவமிக்க இடத்தில் அமைந்துள்ள இலங்கை, இந்த உலக நெருக்கடி நிலையை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து கவனம் செலுத்த வேண்டும்.” என்று தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸம்மில் தெரிவித்தார்.
இலத்திரனியல் ஊடகமொன்றில் ஒளிபரப்பாகிய அரசியல் விவாத நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“ உலகம் இன்றுள்ள நிலை குறித்து நாம் அவதானம் செலுத்த வேண்டும். குறிப்பாக நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தற்போது மூன்றாம் உலகப்போர் இடம்பெற்றுவருகின்றது. இந்த உலகப்போரின் இறுதி அங்கமாகவே அணுஆயுதம் பயன்படுத்தப்படக்கூடும்.
உலகில் பலம்பொருந்திய நாடுகள் தமது நாட்டுக்குள் மோதிக்கொள்வதில்லை. அமெரிக்கா ரஷ்யாவுக்கு சென்றோ அல்லது ரஷ்யா அமெரிக்காவுக்கு வந்தோ நிலத்தை ஆக்கிரமிக்கப்போவதில்லை. இப்போரில் ஏனைய நாடுகள் ஊடாக பலம்பொருந்திய நாடுகள் மோதிக்கொள்கின்றன.
உக்ரைனுக்குள் நேட்டோவும், ரஷ்யாவும் மோதிக்கொள்கின்றன. மத்திய கிழக்கில் அமெரிக்காவும், அதற்கு எதிரான சக்திகளும் சண்டையிடுகின்றன.
இவ்வாறு உலகில் எழுந்துள்ள பிரச்சினை, நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கை போன்ற பூகோல அரசியலில் கேந்திர முக்கியத்துவமிக்க நாடொன்று, எவ்வாறான நிலையில் இருப்பது, இப்பிரச்சினையை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பரந்தப்பட்ட கலந்துரையாடல் அவசியம்.” – என்றார்.










