உள்ளாட்சிசபைத் தேர்தல் அடுத்தவருடம் முற்பகுதியில் நடத்தப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” உள்ளாட்சிசபைத் தேர்தலை விரைவில் நடத்துமாறு உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தேர்தலை நடத்துவதற்க இவ்வருடம் நிதி ஒதுக்கப்படவில்லை. எனவே, அடுத்த வருடம் ஆரம்பத்தில் உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளோம்.
உள்ளாட்சிசபைத் தேர்தலுக்காக வேட்புமனுக்களை தாக்கல் செய்தவர்களில் சிலர் இறந்துவிட்டனர். மேலும் சிலர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். சிலர் அரசியல் ரீதியிலும் மாறியுள்ளனர்.
எனவே, உள்ளாட்சிமன்ற தேர்தல் சட்டத்தில் மாற்றம் மேற்கொண்டு புதிதாக வேட்புமனுக்களை கோருவது சம்பந்தமாக நாடாளுமன்றத்திலுள்ள கட்சிகளுடன் பேச்சு நடத்தப்படும்.
உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் இதனை செய்ய முடியுமா என்பது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுடனும் கலந்துரையாடிவருகின்றோம்.
அதேவேளை, மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு சட்டரீதியில் தடை உள்ளது. பழைய முறையில் அதனை நடத்துவது தொடர்பில் நாடாளுமன்றம் ஊடாக தீர்மானம் எடுக்கவேண்டும்.” – என்றார்.
