” உள்ளாட்சிசபைத் தேர்தலை நடத்தினால் தோல்வி உறுதி என்பதாலேயே, தேர்தலை பிற்போடுவதற்கு அரசு முயற்சிக்கின்றது.” – என்று தொழிலாளர் தேசிய
சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான
பழனி திகாம்பரம் தெரிவித்தார்.
ஹட்டனில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” தேர்தலொன்று நடத்தப்பட்டால் அரசு மண்கவ்வும். அதனால்தான் நிதி இல்லையெனக்கூறி தேர்தலை பிற்போட முயற்சி எடுக்கப்படுகின்றது. தேர்தல் நடைபெறுமா என்பது கேள்விக்குறியாக மாறியுள்ளது. எனவே, தமிழ் முற்போக்கு கூட்டணி தேர்தல் பிரச்சாரத்தை தற்காலிகமாக இடைநிறுத்துகின்றது. இரு மாதங்களுக்கு பிறகு பிரச்சாரத்தை மீள ஆரம்பிப்போம்.
தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டு, தேர்தல் மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்கப்படுமானால்,
வேட்பு மனுக்கள் இரத்து செய்யப்பட்டு மீண்டும் புதிய வேட்பு மனுக்கள்
தாக்கல்செய்யப்பட வேண்டும்.
மக்கள் தேர்தலைக்கோருகின்றனர். எனவே, அதனை நடத்துமாறு அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். ” – எனவும் திகாம்பரம் குறிப்பிட்டார்.
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்.
