தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊடக அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ முற்றாக நிராகரித்தார்.
ஊடக அடக்குமுறை தொடர்பில் எதிரணிகளால் முன்வைக்கப்பட்டுவரும் கருத்துகள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு நிராகரித்தார்.
“ ஊடகங்களுக்கு எதிராக எவ்வித அடக்குமுறையையும் கையாளப்படவில்லை. ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படுகின்றது. சமூகவலைத்தளங்களில் அரசாங்கம்மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
எனினும், சில ஊடகங்கள் மற்றும் சமூகவலைத்தளங்கள் திரிவுபடுத்தப்பட்ட செய்திகளை வெளியிடுகின்றன.
நாட்டின் சுகாதாரத்துறைமீதுள்ள நம்பிக்கையை சீர்குலைக்கின்றன. தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் விதத்திலான செய்திகளை வெளியிடுகின்றன.
இது தொடர்பில் சாதாரண சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். மக்களும் அதைத்தான் கோரி நிக்கின்றனர். அரசாங்கத்துக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மைபலத்தை வழங்கிவிட்டோம், அப்படி இருந்தும் ஏன் போலி தகவல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என மக்கள் கேட்கின்றனர்.” எனவும் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார்.
