எக்ஸ் சமூகவலைதள முடக்கத்தின் பின்னணியில் உக்ரைன் நாட்டின் சதி இருக்கலாம் என அதன் தலைவர் எலான் மஸ்க் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
உலகம் முழுவதும் எக்ஸ் தளம் நேற்று ஒரே நாளில் மூன்று முறை முடங்கியதால் பயனர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.
சமூக வலைதளங்கள், இணையதளங்களின் முடக்கங்களை கண்காணிக்கும் இணையத்தின் தரவுகளின் படி நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் முதல்முறையாக எக்ஸ் தளம் முடங்கியது.
சில மணி நேரங்களில் பிரச்சினை சரிசெய்யப்பட்ட நிலையில் மீண்டும் மாலை 7 மணிக்கு எக்ஸ் தள செயல்பாடுகள் முடங்கின. அதன்பிறகு மீண்டும் சரிசெய்யப்பட்டு, மூன்றாவது முறையாக 8.45 மணிக்கு மீண்டும் தளம் முடங்கியது. பல மணி நேரம் இந்த முடக்கம் நீடித்தது.
இது குறித்து எக்ஸ் தள உரிமையாளர் எலான் மஸ்க் வழங்கியுள்ள நேர்காணலில், “எக்ஸ் தளத்தின் மீது மிகப்பெரிய சைபர் தாக்குதல் நடந்துள்ளது. அந்தத் தாக்குதல் உக்ரைன் பகுதியில் இருந்து நடத்தப்பட்டுள்ளது.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட கணினியின் ஐபி முகவரி உக்ரைன் நாட்டில் இருந்தே அது நிகழ்த்தப்பட்டுள்ளதாகக் காட்டுகிறது.” என்று தெரிவித்துள்ளார்.