எஜமானுக்காக சிறைக்கு சென்ற நாய் – கிடைத்தது பிணை

தனது எஜமானை பொலிஸார் கைதுசெய்து, சிறைக்கூண்டில் அடைத்து வைத்திருந்தபோது, சிறைக்கூண்டுக்கு அருகில் வந்து, எஜமானுக்கு பாதுகாப்பாக நாயொன்று படுத்திருந்த சம்பவம் புளத்சிங்கள பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.

புலத்சிங்கள, மோல்காவ வீதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட குடும்பப் பிரச்சனை கலவரமாக மாறியுள்ளதாக பொலிஸ் அவசர இலக்கமான 119இற்கு அழைப்பொன்று கிடைத்துள்ளது.

இதனையத்து இரவு ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த புலத்சிங்கள பொலிஸார், அந்த வீட்டுக்குச் சென்று , ஒரு நபரை கைது செய்து – பொலிஸ் கூண்டில் அடைத்தனர். சில நிமிடங்களின் பின்னர் சிறைக்கூண்டு அருகே நாயொன்று கூண்டை பார்த்தவாறு சுருண்டு படுத்து கிடந்துள்ளது.

இதை பார்த்த பொலிஸார் நாயை விரட்டியும் அது மறுபடியும் யாருக்கும் தெரியாமல் வந்து சிறைக்கூண்டு அருகே படுத்து கிடந்துள்ளது. பின்னர் பொலிசார் இது குறித்து விசாரித்த போது அது சிறைக்கூண்டில் அடைத்த நபரின் நாய் என்பது தெரியவந்துள்ளது.

மோல்காவ வீதியில் கைது செய்த நபரை ஒரு கிலோமீட்டருக்கு அதிகமான தூரத்தைக் கடந்து பொலிஸ் நிலையத்துக்கு பொலிஸ் ஜீப்பில் அழைத்து வந்த போது அந்த நாயும் ஜீப்பின் பின்னால் ஓடி வந்துள்ளது.
தனது எஜமானை சிறைக்கூண்டில் அடைத்ததும் அந்த நாய் சிறைக்கூண்டு கம்பி வழியே எஜமானரை பார்த்து வாலாட்டிக் கொண்டு சிறிது நேரத்தில் சுருண்டு படுத்துள்ளது.

இந்த நாயின் நடத்தையை பார்த்து சிறிது நேரத்தில் பொலிசார் அந்த நபரை பொலிஸ் வினையில் விடுதலை செய்தனர். பொலிஸ் நிலையத்தை விட்டு எஜமானர் வீடு திரும்பி செல்லும்போது அந்த நாயும் வாலை ஆட்டிக்கொண்டு அவர் பின்னால் சென்றதைப் பார்க்கக் கூடியதாக இருந்துள்ளது.

Related Articles

Latest Articles