” 2024 ஜனவரி மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பதிவு இலக்கமான TIN Number இனை பெற்றுக்கொள்ள வேண்டும்.” – என்று உள்நாட்டு இறைவரி திணைக்கள ஆணையாளர் ஏ.எம்.நபீர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மேற்படி வரிச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை சார்ந்துள்ளது. 2022 ஆம் ஆண்டில் 73,444 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருந்தோடு, இவ்வருடத்தின் நவம்பர் மாத இறுதியில் 81,909 ஆக மேற்படி எண்ணிக்கை அதிகரித்திருந்தது எனவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தனி நபர்கள்கள் என்ற வகையில் 2022 ஆம் ஆண்டில் 204,467 பேர் பதிவு செய்யப்பட்டிருந்தனர். இவ்வருடத்தின் நவம்பர் மாத இறுதியில் 500,196 ஆக அந்த எண்ணிக்கை அதிகரித்தது. பதிவு செய்யப்பட்ட கூட்டு நிறுவனங்களின் எண்ணிக்கை 13,776 – 15,579 அதிகரித்துள்ளது.
வருமானம் ஈட்டும் போதான வரிக்காக பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 41,636 – 242,679 ஆக அதிகரித்துள்ளது. வற் வரிக்காக பதிவு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,604 -13,546 அதிகரித்துள்ளது. 2019 ஆம் ஆண்டில் 1025 பில்லியன்களாக காணப்பட்ட உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் வருமானம் 2020 ஆம் ஆண்டில் 500 பில்லியன்களாக குறைவடைந்திருந்தாலும் இவ்வருடத்தில் 1500 பில்லியன்கள் வரையில் அதிகரித்துக்கொள்ள முடிந்தது.
இந்த நிலைமை எதிர்வரும் நாட்களில் நீடிக்ககூடும். 2024 ஜனவரி மாதம் முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பதிவு இலக்கமான TIN Number இனை பெற்றுக்கொள்ள வேண்டும். இதனை தவறாக புரிந்துகொள்ள கூடாது. பதிவு இலக்கம் மற்றும் வரிக் கோப்புக்களை திறத்தல் என்பன இரண்டு காரணிகளாகும். அனைவருக்கும் தேசிய அடையாள அட்டை இலக்மொன்று இருப்பதை போலவே TIN Number இருக்க வேண்டியதும் அவசியமாகும். வரி செலுத்தக்கூடிய அளவிலான வருமானம் இருக்குமாயின் அவர்கள் வரி செலுத்த வேண்டும். அதற்காக அவர்களுக்கான வரிக் கோப்பும் திறக்கப்படும் எனத் தெரிவித்தார்.
