அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணிமீது, பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர் தாரை பிரயோகத்தை மேற்கொண்டதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
150 நாட்களுக்கும் மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகேவை விடுதலை செய்யுமாறும், பயங்கரவாத தடைச்சட்டத்தை செல்லுபடியற்றதாக்குமாறும், வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்துமே குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட சிவில் அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணி, கொழும்பு, தும்முல்ல பகுதியில் உள்ள ஐ.நா. அலுவலகம் முன்பிருந்து ஆரம்பமானது.
பேரணி கொள்ளுப்பிட்டிய பகுதியை அண்மித்தபோது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மற்றும் நீர் தாரை பிரயோகத்தை மேற்கொண்டனர்.
அதேவேளை, எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆர்ப்பாட்டக்காரர்கள் யூனியன் ப்ளேஸ் ஊடாக காலி முகத்திடலுக்குள் பிரவேசிப்பதை தடுக்கும் வகையில் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
கோட்டை நீதவான் திலின கமகேவினால் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
