” புளியாவத்தை நகரில் மாட்டிறைச்சி கடை அமைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையை முறியடிப்பதில் முன்னின்று செயற்பட்டவர்களில் நானும் ஒருவன். எனவே, அரசியல் ரீதியில் என்னை பழிவாங்கும் நோக்கில் தற்போது அவதூறு பரப்பட்டுவருகின்றது. ‘கைது’ கதைகூட இதன் ஓர் அங்கம்தான்.” – என்று ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரும், அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் தவிசாளருமான முருகையா ரவிந்திரன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” புளியாவத்தை நகரில் மாட்டிறைச்சி கடை அமைப்பதற்கு முயற்சி எடுக்கப்பட்டது. இதற்கு மக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். கோழி இறைச்சி விற்பனை வர்த்தகர் ஒருவரும் இது தொடர்பான பேச்சுகளில் முன்னின்று செயற்பட்டார். ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட தரப்புகளுடன் நடைபெற்ற கலந்துரையாடல்களில் நானும் பங்கேற்றேன். இதன்பயனாக மாட்டிறைச்சி கடை திறப்பது நிறுத்தப்பட்டது.
இந்நிலையிலேயே மாட்டிறைச்சி கடை வருவதை தடுக்க தீவிரமாக செயற்பட்ட கோழி இறைச்சிகடை வர்த்தகர் இலக்கு வைக்கப்பட்டார். அவரின் வீட்டுக்குள் பிரதேச சபையின் தற்போதைய தலைவர் ரவி குழந்தைவேல், செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், எவ்வித அறிவித்தலும் இன்றி அத்துமீறி நுழைந்து அநாகரீகமாக செயற்பட்டனர். வீட்டுக்குள் வீடியோ எடுக்கும் ஊடகவியலாளரையும் அழைத்து வந்திருந்தனர். இதனால் வீட்டில் இருந்தவர்கள் தர்மசங்கடத்துக்கு உள்ளாகினர்.
எனது பக்கத்து வீட்டிலேயே இச்சம்பவம் இடம்பெற்றது. அங்கு கூச்சல் சத்தம் கேட்டதையடுத்து நான் சென்றேன். முறையாகவா – சட்டத்தின் பிரகாரமா பரிசோதனை நடக்கின்றது என வினவினேன். ஊடகவியலாளர் ஒருவர் இருந்ததால் அதிகாரிகள் வேண்டுமென்றே என்னை இலக்கு வைத்து செயற்பட்டனர்.
சட்டம் பற்றி கேட்டபோய், கடமைக்கு இடையூறு விளைவித்தேன் என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் செய்யப்பட்டது.
அவ்வாறு செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் எமது தரப்பு விளக்கத்தை கேட்ட பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டோம். வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர், சட்டத்தின் பிரகாரம் உரிய நடைமுறைகளை பின்பற்றி நாம் வீடு திரும்பினோம். பொலிஸார் எம்மை கைது செய்து சிறையில் அடைக்கவில்லை. அவ்வாறு அவதூறு பரப்பட்டது. அரசியல் ரீதியில் என்னை பழிவாங்கும் நோக்கிலேயே இவ்வாறு தகவல் பரப்பட்டது. ” – என்றார்.










