மலையக மக்கள் காணி உரிமையே கோரி வருகின்றனர். இந்நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்று ஏதேவொரு பத்திரத்தை வழங்கியுள்ளது. இது மலையக மக்களை முட்டாளாக்கி ஏமாற்றுகின்ற செயலாகும் என்று இதொகாவின் பிரதித் தலைவர் கணபதி கணகராஜ் தெரிவித்தார்.
இதொகா தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” தோட்டத் தொழிலாளர்களுக்கு வீட்டுரிமை வழங்கப்படுகின்றது என பண்டாரவளையில் நிகழ்வொன்று நடத்தப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி உரிமை என்பதே எமது கோஷமாக இருந்து வந்தது. கடந்த காலங்களில் அதற்காக செயற்பட்டுள்ளோம்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 பேர்ச்சஸ் காணி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சியில் அமைச்சரவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. செல்லுபடியான காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட வேண்டும் என்பதற்காக 4 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டது.
ஆனால் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இன்று ஏதேவொரு பத்திரத்தை வழங்கியுள்ளது. இது மலையக மக்களை முட்டாளாக்கி ஏமாற்றுகின்ற செயலாகும்.
அதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாவுக்கு மேற்பட்ட சம்பளமே வேண்டும் என ஜே.வி.பியின் தொழிற்சங்கம் வலியுறுத்தி வந்தது. தற்போது 1, 750 ரூபா எனக் கூறப்படுகின்றது. இது ஏற்புடைய தொகை அல்ல. இதைவிட அதிக சம்பளமே எமது மக்களுக்கு வேண்டும்.” -என்றார்.
