‘என் வழி தனி வழி – கூட்டணிகளை நம்ப தயாரில்லை’ – அனுசா அதிரடி

அண்ணா சந்திரசேகரன் தொழிலாளர் முன்னணி மற்றும் சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் அனைத்து செயற்பாடுகளும் என் தந்தை வழியில் தனித்துவமாகவே அமையும் என்று சட்டத்தரணியும் மேற்படி அமைப்புக்களின் செயலாளர் நாயகமுமான அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு,

” தனது அரசியல் , தொழிற்சங்க , சமூக பயணத்தில் என் தந்தை சொல்லொனா துன்பங்களை அனுபவித்த போதும் கூட இறுதிவரை தனது தனித்துவத்தை விட்டுக் கொடுக்காமலேயே செயற்பட்டார்.  இது தான் அவருக்கு மலையக அரசியலில் மாத்திரமல்லாது தேசிய, சர்வதேச அரசியலிலும் நிரந்தரமான கௌரவத்தினை ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே என் தந்தை வழியில் எனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ள நானும் கடைசிவரை தனித்துவமாகவே பயணிப்பேன். மலையக அரசியல் களத்தில் நிரந்தரமாகியுள்ள வெற்றிடத்தினை நிரப்பி புதிய தலைமுறைக்கு நம்பிக்கையூட்டும் எதிர்கால செயற்பாடுகளை திட்டமிட்டே செயற்பட்டு வருகிறேன்.

நல்ல ஒரு விடியலுக்காக காத்திருக்கும் இளைஞர்களின் எதிர்ப்பார்ப்புகளுக்கு ஏற்ப நான் தனிவழியிலேயே பயணிப்பேன். அதேவேளை என் தந்தையின் அரசியல் செயற்பாடுகளை அவரது கொள்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளவர்களின் ஆலோசணைகளையும் ஒத்துழைப்பினையும் நான் நிச்சயமாக மதித்து ஏற்றுக்கொள்வேன்.

அதைவிடுத்து அவ் அவ் காலத்துக்கான கூட்டணிகளை நம்பி செயற்பட மாட்டேன்.  ஏனெனில் மறுபக்கத்தில் இதுவும் தொய்வடைந்த அரசியல் செயற்பாடாகவே அமையும் என்பதே என் நிலைபாடு.”  -என்றுள்ளது.

Related Articles

Latest Articles