எம்.பி. பதவியை இழப்பாரா விஜயதாச ராஜபக்ச?

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பதில் தலைவராக நியமனம் பெற்ற நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச நாடாளுமன்ற உறுப்புரிமையை இழக்க நேரிடலாம் – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தெரிவித்துள்ளது.

மொட்டு கட்சி தலைமையகத்தில்  நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி கூறியவை வருமாறு,

“ விஜயதாச ராஜபக்ச மொட்டு கட்சியில் அங்கத்துவம் பெற்றிருந்தார். எமது கட்சி ஊடாகவே நாடாளுமன்றம் தெரிவானார். தற்போது அமைச்சு பதவியை வகிக்கின்றார். ஒரு மாதத்துக்கு முன்னரே சுதந்திரக்கட்சியின் உறுப்புரிமையை பெற்றார் என மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

எமது கட்சி யாப்பின் பிரகாரம், கட்சி உறுப்பினர் ஒருவர் பிற கட்சியில் உறுப்புரிமை பெற்றால் எமது கட்சியில் இருந்து விலகியவராகக் கருதப்படுவார்.  எமது கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி அமைச்சு பதவியை பெற்றுவிட்டு, எதிரணியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சியொன்றில் பதில் தலைவர் பதவியை விஜயதாச பெற்றிருப்பது தவறு.

அவருக்கு கட்சி உறுப்புரிமை தடை செய்யப்படுவதன் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழக்க நேரிடலாம் என்றே நான் கருதுகின்றேன். இது தொடர்பில் ஆராய்ந்து எமது கட்சி முடிவெடுக்கும்.” – என்றார்.

Related Articles

Latest Articles