எரிபொருட்களின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. எனவே, அதற்கான சாத்தியம் கிடைக்கும் முதல் சந்தர்ப்பத்திலேயே நிச்சயம் விலை குறைப்பு இடம்பெறும் – ஆளும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி மீண்டும் அறிவிப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கூறியவை வருமாறு,
” பஸில் ராஜபக்ச நிதி அமைச்சராக பதவியேற்ற கையோடு 24 மணிநேரத்துக்குள் எரிபொருட்களின் விலை குறைக்கப்படும் என்ற அறிவிப்பை எமது கட்சி விடுக்கவில்லை. எனினும், குறையும் என்ற நம்பிக்கையை மக்கள் வைத்துக்கொள்ள வேண்டும். காலக்கெடு விதிக்க முடியாது. இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன. எனவே, எரிபொருட்களின் விலையை குறைப்பதற்கான சூழல் உருவாகினால் அதற்கான முதல் சந்தர்ப்பத்திலேயே விலை குறைப்பு செய்யப்படும்.
அதேவேளை, பஸில் ராஜபக்ச போன்ற திறமையானவரின் வருகையால் அரசு பலமடைந்துள்ளது. ஒரு நாளில் மாற்றத்தை எதிர்ப்பார்க்க முடியாது. சிறந்த பெறுபேறுகள் கிட்டும். அதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
அமைச்சரவை மறுசீரமைப்பு தொடர்பில் ஜனாதிபதியே தீர்மானம் எடுப்பார். அவ்வாறானதொரு மாற்றம் இடம்பெறவுள்ளது என்பதற்கான சமிக்ஞையை அவர் இன்னும் வெளிப்படுத்தவில்லை. மறுசீரமைப்பு செய்யவேண்டியேற்பட்டால் அவர் அதனை செய்வார். ” – என்றார்.
