ஏமன் அருகே செங்கடலில் கப்பல் மீது துப்பாக்கிச்சூடு மற்றும் கையெறி குண்டுகளை வீசி ஹவுதி படையினர் திடீர் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்கள் வசிக்கும் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான போர், நீண்ட நாட்களாக நீடித்து வருகிறது.
இந்த போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக ஏமனின் ஹவுதி பயங்கரவாத படை செயல்படுகிறது.
இவர்கள், காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்தவில்லை என்றால், செங்கடல் வழியாக இஸ்ரேல் சென்று வரும் சரக்கு கப்பல்களை தாக்குவோம் என அறிவித்தனர். அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பல சரக்கு கப்பல்களை, ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள் வாயிலாக தாக்கி வருகின்றனர்.
இந்நிலையில், செங்கடலில் பயணித்த சரக்கு கப்பல் மீது ஹவுதி படையினர் நேற்று தாக்குதல் நடத்தினர். துப்பாக்கிச்சூடு நடத்தியும், கையெறி குண்டுகளை வீசியும், சிறிய ரக ராக்கெட்டுகளை ஏவியும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலுக்கு கப்பலில் இருந்த பாதுகாப்புப் பிரிவினரும் துப்பாக்கிச்சூடு நடத்தி பதிலடி கொடுத்தனர்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர், ஈரான்-இஸ்ரேல் போர் மற்றும் ஈரானின் அணுசக்தி நிலையங்களை குறி வைத்து அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு மத்திய கிழக்கில் பதட்டங்கள் குறைந்து வரும் நிலையில், சரக்கு கப்பல் மீது ஹவுதி படையினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.