“தற்போதுள்ள இந்த IMF கடன் இணக்கப்பாட்டுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட சமயம், வெளிநாட்டுக் கடனை 2033 முதல் செலுத்துமாறே தெரிவித்தது. ஆனால் முன்னைய அரசாங்கம் தானாகவே அதை 2028 முதல் செலுத்துவதற்கு இணக்கப்பாடு கண்டது.
தற்போதைய அரசாங்கமும் அதை இருந்தவாறே ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் கீழ், ஆண்டுதோறும் 4.5 பில்லியன் டொலர்களை நாம் செலுத்த வேண்டும்.
இந்த இணக்கப்பாட்டை மாற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஆரம்பம் முதல் ஐக்கிய மக்கள் சக்தி இருந்து வருகின்றது. இதன் மிகப்பெரிய சுமையைக் குறைக்க வேண்டும்.
தற்போது இந்த டித்வா சூறாவளி 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நாம் கடும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளோம். பேச்சை ஆரம்பித்து இந்தக் கடன் இணக்கப்பாடுகளின் விதிமுறைகளை எளிதாக்குவதற்கு அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருக்க வேண்டும்.” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியால் முன்னெடுக்கப்பட்டு வரும் மூச்சுத் திட்டத்தின் கீழ், ஹெம்மாத்தகம பிரதேச வைத்தியசாலைக்கு 28 இலட்சம் ரூபா மதிப்புள்ள வைத்தியசாலை உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (24) இடம்பெற்றது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
உலகப் பொருளாதார வல்லுநர்கள் கூறுவது போல, வெளிநாட்டுக் கடன் சுமையைக் குறைக்க வேண்டும் என்ற கருத்தை நாம் எடுத்துக் கொண்டு, புதிய இணக்கப்பாட்டை எட்ட வேண்டும்.
இந்தக் கருத்து சரியானது என்பதால், அரசாங்கம் இதை ஏற்றுக்கொண்டு புதிய இணக்கப்பாடு ஊடாக செல்ல வேண்டும். அரசாங்கத்தால் இதைச் செய்ய முடியாவிட்டால், எதிர்க்கட்சி இதனைச் செய்வதற்குத் தயார் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
உலகப் புகழ்பெற்ற பொருளாதார வல்லுநர்கள் கூட நமது நாடு பொருளாதாரக் கடன் நிவாரணத்தைப் பெற வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்துகின்றனர். கடன் வெட்டு தொடர்பிலும் அவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். ஆனால் இந்த இணக்கப்பாடுகளைக் காண்பதற்கு அரசாங்கத்திற்கு முதுகெலும்பு இருக்க வேண்டும். இந்த நிபந்தனைகளோடு நமது நாட்டால் முன்னோக்கிப் பயணிக்க முடியாது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இத்தருணத்தில் மக்கள் எந்தளவு உதவியற்றவர்களாக காணப்படுகின்றனர் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் கூற்றுப்படி, இந்தப் பேரழிவால் 374,000 தொழில்கள் இழக்கப்பட்டுள்ளன.
23% விவசாய காணிகளும் 35% தேயிலைத் தோட்டங்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளன. மாதத்திற்கு ரூபா.48 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களின் தேயிலை காணிகள் கூட அழிந்துபோயுள்ளன. அரசாங்கம் வீராப்பு பேசிக் கொண்டிருக்காமல், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளின் வழிமுறைமைக்கு ஏற்ப நடந்து கொள்ள வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.










