” மக்கள் மாறிவிட்டனர். சமூகமும் மாறியுள்ளது. எனவே, அதற்கேற்ற வகையில் கட்சிகளிலும் மாற்றம் அவசியம். ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய இரண்டுக்கும் இது பொருந்தும்.”
இவ்வாறு முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப்பதவியில் மாற்றம் வரவேண்டுமென கருதுகின்றீர்களா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” சஜித் பிரேமதாச இரு ஜனாதிபதி தேர்தல்கள் மற்றும் இரு பொதுத்தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ளார். இதற்கான பொறுப்பை அவரும், அவரது கட்சி உறுப்பினர்களும் ஏற்கவேண்டும்.
அதேபோல ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஏற்பட்ட தோல்விக்கு ரணில் விக்கிரமசிங்க மட்டுமல்ல நான் உள்ளிட்டோரும் பொறுப்புக்கூறவேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சி பிளவுபடாமல் இருந்திருந்தால் தற்போது பாரிய சக்தியாக இருந்திருக்கும்.” – எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தலைமைத்துவ மாற்றம் என்பது கட்சி யாப்புக்கமைய இடம்பெற வேண்டும். ஹர்ஷ டி சில்வா, கபீர் ஹாசீம், ரஞ்சித் மத்தும பண்டார உட்பட ஐக்கிய மக்கள் சக்தியில் சிறந்த இரண்டாம் நிலை தலைவர்கள் உள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைப்பதவி பற்றி எனக்கு குறிப்பிட முடியாது. ஜனநாயகக் கட்சியென்றால் கால ஓட்டத்துக்கேற்ப மறுசீரமைப்பு அவசியம்.
மக்கள் மாறிவிட்டனர். சமூகமும் மாறிவிட்டது. கட்சி என்பதைவிட கொள்கைக்கு மக்கள் முக்கியத்துவம் வழங்கியுள்ளனர். அதற்கேற்ற வகையில் இரு கட்சிகளிலும் மாற்றம் அவசியம். ” – என நவீன் திஸாநாயக்க மேலும் குறிப்பிட்டார்.
