ஐ.நா. அலுவலகம் முன்பாக போலி உண்ணாவிரதத்தை முன்னெடுத்த தரப்பே தற்போது எட்கா உடன்படிக்கை தொடர்பிலும் கொக்கரிக்கின்றன. எனவே, இவ்வாறானவர்களில் உருவாக்கப்படும் மாயைகளுக்கு மக்கள் ஏமாறக்கூடாது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
“எம்.சி.சி. உடன்படிக்கைக்கு எதிராக கோஷம் எழுப்பினர். 8 வருடங்கள் பின்நோக்கி சென்றோம். தற்போது எட்கா உடன்படிக்கை தொடர்பில் மக்களை ஏமாற்றுவதற்கு மாயையை உருவாக்கி வருகின்றனர். இன்னும் எத்தனை வருடங்கள் பின்நோக்கி செல்ல நேரிடுமோ தெரியவில்லை.
ஐ.நா. அலுவலகம் முன் சென்று படுத்து, தலையணையின்கீழ் உணவு வைத்துக்கொண்டு போலி உண்ணாவிரதம் இருந்தவர்களே இவ்வாறு செயற்படுகின்றனர். எனவே, போலி மாயைகளுக்கு ஏமாறுவதா என்பது தொடர்பில் மக்களே தீர்மானிக்க வேண்டும்.” – என்றார்.
