ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவை 28 ஆம் திகதி சந்திக்கிறது கூட்டமைப்பு

” இலங்கைக்கு ஒக்டோபர் 27 ஆம் திகதி பயணம் மேற்கொள்ளும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதிகளுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 28 ஆம் திகதி பேச்சு நடத்தவுள்ளது.” – என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் இன்று தெரிவித்தார்.

அநுராதபுரம் சிறைச்சாலைக்கு கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டிருந்த சுமந்திரன் எம்.பி. தலைமையிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள், தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்து கலந்துரையாடினர்.

அதன்பின்னர் சிறைச்சாலை வளாகத்தில் வைத்து சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பிலும் கருத்து வெளியிட்டனர்.

” பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கிவிட்டு தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் இந்த அரசு விடுதலை செய்ய வேண்டும் என்பதே எமது வலியுறுத்தல். குறித்த சட்டம் நீக்கப்படும் என்ற உறுதிமொழி ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 4 வருடங்களுக்கு முன்னரே வழங்கப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தினர் கேள்வி எழுப்புவார்கள் என நம்புகின்றோம். நாமும் செவ்வாய்கிழமை குறித்த குழுவினரை சந்திக்கவுள்ளோம்.

அநுராதபுரம் சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் சுயாதீன விசாரணை இடம்பெற வேண்டுமென்றால் பாதிக்கப்பட்ட கைதிகள், யாழ்ப்பாணம் அல்லது அவர்கள் இருக்கும் பகுதிகளில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட வேண்டும்.” என்றும் சுமந்திரன் எம்.பி. குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles