இஸ்ரேல் ரபா நகர் மீதான தாக்குதலை நாளுக்குநாள் தீவிரப்படுத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை அழிப்பதற்காக இஸ்ரேல் சமீபத்தில் நடத்திய வான்வழித் தாக்குதலில் ரபாவில் உள்ள அகதிகள் முகாமில் உள்ள குழந்தைகள் உட்பட 45 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு சர்வதேச அளவில் கண்டனம் எழுந்தது. அத்துடன், இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களை மையமாகக் கொண்டு ‘அனைத்து கண்களும் ரபா மீது’ (All Eyes On Rafah) என்ற பெயரில் ஒரு புகைப்படம் வைரலானது.
இஸ்ரேல் தாக்குதலின்போது தப்பியோடிய லட்சக்கணக்கான பாலஸ்தீனர்கள் ரபாவில் தங்கியிருப்பதை குறிக்கும் வகையில், மலைகளால் சூழப்பட்ட பாலைவன நிலப்பரப்பில் உள்ள கூடாரங்களை அந்த புகைப்படம் சித்தரிக்கிறது.
அந்த புகைப்படத்தை உலகெங்கிலும் உள்ள பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் சமூக ஊடக பயனர்கள் பகிர்ந்து, தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பெஞ்சமின் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேல் அரசாங்கம் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளது.
‘அக்டோபர் 7 அன்று உங்கள் கண்கள் எங்கே இருந்தன’ என்ற வாசகத்துடன் கூடிய அந்த படத்தில், ஹமாஸ் பயங்கரவாதி, ஒரு குழந்தையின் முன் துப்பாக்கியுடன் நிற்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலைப் பற்றி ஏன் யாரும் பேசவில்லை? என்று என்று மக்களிடம் இஸ்ரேல் கேள்வி எழுப்பியிருக்கிறது.
இந்த படத்தை பலரும் பகிர்ந்து தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் பகுதிக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் ஏராளமான பொதுமக்கள் உள்பட 1160 பேர் கொல்லப்பட்டனர். 250 பேரை பணயக் கைதிகளாக சிறைப்பிடித்து சென்றனர். அதன்பிறகே ஹமாஸை அழிக்க இஸ்ரேல் தீவிரமான ராணுவ நடவடிக்கையை தொடங்கியது.
இஸ்ரேலில் இருந்து சிறைப்பிடித்து காசாவிற்கு கொண்டு செல்லப்பட்ட பணயக் கைதிகளில் சிலர், நவம்பர் மாதம் ஒரு வாரம் போர் நிறுத்தத்தின்போது விடுதலை செய்யப்பட்டனர். இன்னும் 99 பேர் ஹமாஸ் வசம் இருப்பதாக இஸ்ரேல் நம்புகிறது. 31 பேர் இறந்துள்ளனர். மீதமுள்ளவர்கள் உயிருடன் இருப்பதாக கூறுகிறது.