ஒக்டோபர் முதலாம் திகதி முதல் சகல அரச மற்றும் தனியார் ஊழியர்களை வேலைக்கு அழைப்பது தொடர்பில் இன்னும் தீர்மானம் எடுக்கப்படவில்லை. கலந்துரையாடலின் பின்னர், நாட்டின் நிலைமை கருத்திற்கொண்டே இது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என்று அமைச்சரவை இணைப்பேச்சாளரும், அமைச்சருமான ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று முற்பகல் அரச தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது. இதன்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அதேவேளை, ஒக்டோபர் முதலாம் திகதி ஊரடங்கு சட்டத்தை தளர்த்த வேண்டும் என்பதுதான் அரசால் கடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானமாகும். எனினும், அடுத்த கொரோனா ஒழிப்பு செயலணிக்கூட்டத்தில் இது தொடர்பில் இறுதி முடிவு எட்டப்படும்.
30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரு தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டு இரு வாரங்களின் பின்னர் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கின்றது. இவ்விடயம் உட்பட விஞ்ஞானப்பூர்வமான சில காரணிகளை அடிப்படையாகக்கொண்டே ஒக்டோபர் முதலாம் திகதிவரை ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டது.
தற்போது தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துவருகின்றது. மரண எண்ணிக்கையும் வீழ்ச்சியடைந்துள்ளது. எனவே, ஒக்டோபர் மாதம் முதல் புது யுகத்துக்குள் காலடி வைக்க முடியும் என நம்புகின்றோம்.” என்றும் அமைச்சர் கூறினார்.