‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி எதற்காக உருவாக்கப்பட்டது? சபையில் அனுரகுமார கேள்வி

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணி எதற்காக உருவாக்கப்பட்டது? அதனைச் சேர்ந்த உறுப்பினர்கள் எந்த வரையறையின் கீழ் தெரிவுசெய்யப்பட்டனர்? போன்ற கேள்விகளை  மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க பிரதமரிடம் எழுப்பினார்.

ஜனாதிபதிக்கு இருக்கின்ற அதிகாரங்களின் அடிப்படையில் இந்த செயலணி உருவாக்கப்பட்டதாகப் பிரதமர் கூறினார். இந்தப் பதிலில் திருப்தி இல்லை என அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இந்தச் செயலணியை உருவாக்குவது தொடர்பில் ஏற்கனவே பல எதிர்ப்புகள் வெளியிடப்படுகின்ற அதே சூழ்நிலையில், நாட்டில் மக்களுக்கு இடையில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாகப் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கத்தில் தான் இது உருவாக்கப்பட்டு இருக்கிறதா என்ற சந்தேகத்தை எழுப்பினார்.

அதேபோன்று இந்தச் செயலணி உருவாக்கப்பட்டமை தொடர்பில் பிரதமர் மற்றும் நீதி அமைச்சர் யாரும் அறிந்திருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் தமது கேள்விக்கு சரியான பதிலை வழங்க முடியாமல், பிரதமரும், சபை முதல்வரும் தடுமாறுவதை அறிவதாகவும் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

இதன்போது பதில் வழங்கிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, கடந்த காலங்களில் நல்லாட்சி அரசாங்கத்தில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களுக்குத் தகுதி வாய்ந்தவர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை என்றும் அதன்போது அதனை எதிர்க்காதவர்கள், இதுபற்றிக் கேள்வி எழுப்பாமல் ஜனாதிபதிக்கு தமது கடமையை நிறைவேற்ற இடம் அளிக்குமாறு கூறினார்.

இதன்போது எழுந்த நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரும் இவ்வாறான கருத்துக்களை வெளியிடுவது முறையற்றது எனச் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரான அவருக்கும் இந்த விடயம் சம்பந்தமாக எதுவும் தெரிந்திருக்கவில்லை என்பதையே இது எடுத்துக் காட்டுகிறது என்றும் கூறினார்.

Related Articles

Latest Articles