இரத்தினபுரி மாவட்டத்தில் வாழும் சிறுபான்மை சமூகத்தினர் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய தருணம் உதயமாகியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளரும், வேட்பாளருமான எஸ்.ஆனந்தகுமார் தெரிவிக்கின்றார்.
பலாங்கொடை பகுதியிலுள்ள புத்திஜீவிகளை நேற்றைய தினம் (29) சந்தித்து கலந்துரையாடல்களை நடத்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் இணைந்து வாழ்ந்து வருகின்ற நிலையில், இந்த இரண்டு தரப்பினரும் ஒன்றிணைந்து வாக்களிக்கும் பட்சத்தில் நிச்சயம் ஒன்று அல்லது இரண்டு பிரதிநிதித்துவத்தை பெற்றுகொள்ள முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
தமிழர்களுடன் முஸ்லிம்கள் கைக்கோர்த்தால், இரத்தினபுரியில் சிறுபான்மையினர் அடிமைகளாக வாழ வேண்டிய தேவையில்லை என எஸ்.ஆனந்தகுமார் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இரத்தினபுரியில் சிறுபான்மை சமூகத்தின் பாதுகாப்பு இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தான் நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் இதன்போது உறுதியளித்திருந்தார்.
இதேவேளை, இறக்குவானை மற்றும் பலாங்கொடை ஆகிய நகரங்களுக்கு எஸ்.ஆனந்தகுமார் நேற்று விஜயம் செய்து தனது தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தார்.
எஸ்.ஆனந்தகுமாருக்கு ஆதரவாக பெருந்திரளானோர் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததுடன், பெருந்திரளான வாகனங்களும் பேரணியாக சென்றிருந்தன.