இந்திய – இலங்கை மக்களின் ஆரோக்கியம், அமைதி மற்றும் செழுமை ஆகியவற்றை வேண்டியும் இரு நாடுகளுக்கும் இடையிலான நிலையான நட்புறவை வேண்டியும் புத்தபெருமானிடம் பிரார்த்திப்பதற்காக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா , கங்காராம விகாரைக்கு இன்று காலை விஜயம் செய்திருந்தார்.
இதன்போது உயர் ஸ்தானிகரின் துணைவியாரான திருமதி தனுஜாவும் இணைந்து கொண்டிருந்தார்.
விகாரையின் பிரதி குருவான சங்கைக்குரிய கலாநிதி கிரிந்தே அஸாஜி தேரர் அவர்கள் உயர் ஸ்தானிகரை விகாரையில் வரவேற்றதுடன், 2017 ஆம் ஆண்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இவ்வாலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு சர்வதேச வெசாக் தின நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தமையை இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூர்ந்திருந்தார்.
அத்துடன் புத்தபெருமான் ஞானம் பெற்ற இந்திய மண்ணில் தான் கற்றுக்கொண்ட விடயங்களையும் இச்சந்தர்ப்பத்தில் பகிர்ந்து கொண்டிருந்த சங்கைக்குரிய அசாதி தேரர் அவர்கள், இரு நாடுகளுக்கும் இடையிலான நாகரீக உறவுகளின் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து இவ்விகாரையில் நடைபெற்ற விசேட பூஜையினை அடுத்து உயர் ஸ்தானிகர் ஜா அவர்களுக்கும் திருமதி தனுஜா ஜா அவர்களுக்கும் புனித பிரித் நூலினை அணிவித்து அவர் ஆசி வழங்கினார்.
இச்சந்தர்ப்பத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முகரீதியான உறவுகளை குறிப்பாக ஆழமாக வேரூன்றி இருக்கும் நாகரீக, வரலாற்று, மத மற்றும் கலாசார ரீதியிலான பிணைப்புகளை வலுப்படுத்துவதற்காக இந்திய தலைமைத்துவம் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டினை உயர் ஸ்தானிகர் அவர்கள் வலியுறுத்தியிருந்தார்.
இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 10 மில்லியன் அமெரிக்க டொலர் நன்கொடையின் கீழ் மத ஸ்தலங்களை சூரிய மின்சக்தி மூலமாக இணைப்பதற்காக அண்மையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை உட்பட இரு நாடுகளுக்கும் இடையிலான பௌத்த உறவுகளை வலுவாக்குவதற்காக முன்னெடுக்கப்படும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் பௌத்த துறவிகள் இந்தியாவில் கல்வியினை தொடர்வதற்காக வழங்கப்படும் புலமைப் பரிசில் திட்டங்கள் குறித்தும் சங்கைக்குரிய தேரர் அவர்களுடன் உயர் ஸ்தானிகர் கலந்துரையாடியிருந்தார்.

இருதரப்பு ஒத்துழைப்பின் மையப் பகுதியில் மக்களை இலக்காகக் கொண்டு இந்தியாவின் அயலுறவுக்கு முதலிடம் கொள்கைக்கு அமைவாக இலங்கையுடன் வலுவான சகலதுறை ஒத்துழைப்பினை மேம்படுத்த இந்தியா கொண்டிருக்கும் வலுவான உறுதிப்பாட்டினையும் உயர் ஸ்தானிகர் இச்சந்தர்ப்பத்தில் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
