கடூழிய சிறைதண்டனைக்கு எதிராக மஹிந்தானந்த மேன்முறையீடு!

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று(09) உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு​வை தாக்கல் செய்துள்ளார்.

2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நெருங்கியிருந்த காலத்தில் அரசாங்கத்தின் நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி 14,000 கெரம்போட்கள் மற்றும் 11,000 தாம் போர்ட்கள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை கொள்வனவு செய்து விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகித்தமை ஊடாக அரசாங்கத்திற்கு 53.1 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இதற்கு எதிராக பிரதிவாதியான முன்னாள் அமைச்சர், சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாக மேன்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மனு ஒப்படைக்கப்படவுள்ளது.

இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்த குற்றச்சாட்டுகளுக்கு குற்றவாளியாக அடையாளங்காணப்பட்ட தமக்கு கொழும்பு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதி குழாத்தினால் கடந்த மே மாதம் 29ஆம் திகதி 20 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக மனுதாரர் தனது மேன்முறையீட்டு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சில விடயங்களை தவறாக புரிந்து கொண்டு மூவரடங்கிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்த தீர்ப்பை வழங்கியதாக மனுதாரர் தனது மனுவில் கூறியுள்ளார்.

தீர்ப்பை வழங்கும் போது பிரதிவாதி சார்பில் முன்வைக்கப்பட்ட சில விடயங்களை மேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் கவனத்தில் கொள்ளவில்லை என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நிலைமையில் தமக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு சட்டத்திற்கு முரணானது என மனுதாரர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் தண்டனை உத்தரவை வலுவிழக்கச் செய்து உத்தர​விடுவதுடன் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்து விடுதலை செய்து உத்தரவிடுமாறும் மனுதாரர் உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை முன்வைத்துள்ளார்.

Related Articles

Latest Articles