இங்கிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான மூன்றாவதும் கடைசியுமான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சவுதம்டனில் இன்று நடைபெறவுள்ளது.
இலங்கை நேரப்படி இரவு 10.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில் இங்கிலாந்து கிரிக்கெட் சபை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு இருக்கிறது.
ஸ்டேடியத்தில் ரசிகர்களை அனுமதிக்காமல் கொரோனா தடுப்பு உயிர் மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி ஒவ்வொரு போட்டிகளும் நடத்தப்படுகிறது. அயர்லாந்து, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான் அணிகளைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக அங்கு பயணித்துள்ளது.
இதன்படி இங்கிலாந்து-ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி சவுதம்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து இறுதி பந்தில் வெற்றிக்கனியை ருசித்தது. இரண்டாவது போட்டியிலும் இங்கிலாந்து வெற்றிநடை போட்டது.
தொடரை இங்கிலாந்து கைப்பற்றியுள்ள நிலையில் இன்று நடைபெறும் போட்டியில் வெற்றிபெற்று படுதோல்வியை தடுப்பதற்கு ஆஸ்திரேலியா போராடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.