ஜனாதிபதியின் அக்கிராசன உரை மீதான ஒத்திவைப்பு விவாதத்தில் எதிர்க்கட்சியினருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறித்து, எதிர்க்கட்சியில் உள்ள கட்சித் தலைவர்கள் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். அத்துடன், கட்சித் தலைவர்கள் பலர் தமது உரைகளை நிராகரித்துள்ளனர்.
ஜனாதிபதி உரை மீதான விவாதத்தை முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரியிருந்த நிலையில், அவருக்கான நேரமும் குறைக்கப்பட்டதால், ரணில் விக்ரமசிங்க நேற்று சீற்றமடைந்திருந்தார்.
அத்துடன், எதிர்க்கட்சியைச் சேர்ந்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனுக்கு 5 நிமிடங்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீமிற்கு 9 நிமிடங்களும், ஜே.வி.பி. தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவிற்கு 10 நிமிடங்களும் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் மனோ கணேசன் மற்றும் ரவூப் ஹக்கீம் ஆகியோர் உரையாற்றவில்லை.
அத்துடன், அநுர குமார திஸாநாயக்க தனது நேரத்தை, தனது கட்சிக்காரர் விஜித்த ஹேரத்திற்கு வழங்கியுள்ளார். இந்தக் குறுகிய நேரத்தில் எதனை பேசுவது கன்று அவர்கள் கடிந்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த விவாதத்தில் உரையாற்றிய சஜித் பிரேமதாச தனக்கு வழங்கப்பட்ட 30 நிமிடங்களுக்கு மேலதிகமாக 27 நிமிடங்கள் உரையாற்றியிருந்தார். மொத்தமாக இருந்த இரண்டரை மணி நேரத்தில் சுமார் ஒரு மணி நேரத்தை எடுத்து, தங்களுக்கு உரிய நேரம் வழங்கவில்லை என எதிர்தரப்பில் உள்ள கட்சித் தலைவர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.