கண்டி, கலஹா வீதியிலுள்ள பாலம் கடந்த மாதம் பெய்த தொடர் மழையால் பாலத்தின் ஒரு பகுதி தாழிறங்கி ஆற்றில் வீழ்ந்துள்ளது.
கலஹாவிலிருந்து ஹந்தானை ஊடாக கண்டிக்கு செல்லும் பாதையில், கலஹா பிரிவிலேயே இப்பாலம் அமைந்துள்ளது. இப்பாலமானது ஆங்கிலேயர் காலத்தில் 1880 ஆம் ஆண்டில் கம்பிகளைக் கொண்டு கொங்கிரீட்டினால் கட்டப்பட்டதாகும்.
கண்டி கலஹா பிரிவில் அமைந்துள்ள இந்த பாலம் கடந்த 15 வருடங்களுக்கு முன் ஓரளவு பழுதடைந்த நிலையிலேயே காணப்பட்டது. அக்காலப் பகுதியில் பார ஊர்திகளும் பஸ்களும் பாலத்தின் ஊடாக பயணிப்பதற்கு தயக்கம் காட்டின. பின்னர் ஓரிரு சிறு திருத்த வேலைகளோடு பாலத்தின் செயற்பாடு ஆரம்பித்து, வழமைப்போல் இப்பாலத்தை பயன்படுத்தி வந்தனர்.
இருப்பினும் குறுகிய காலத்தில் விடாது பெய்த மழையால் பாலத்தின் ஒரு பகுதி ஆற்றில் உடைந்து விழுந்துள்ளது. அத்தோடு பாலத்தைத் தாங்கி கொண்டிருக்கும் இரும்பு தூண்களும் துருப்பிடித்துள்ளது.
தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இப்பாலத்தினூடாகவே பயணிக்கின்றனர். நகர மக்கள் இந்தக் பாலத்தின் ஊடாகவே தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து கொள்கின்றனர். கலஹா, ஹந்தாணை, அப்பர் கலஹா, கித்துல்முல்ல, தெல்தோட்டை, பத்தனை, புப்புரஸ்ஸ, தலாத்தோயா, முல்லோயா, கம்பளை போன்ற பல இடங்களிலுள்ள மக்கள் இப்பாலத்தையே பயன்படுத்துகின்றனர்.
கண்டி பெரிய வைத்தியசாலை, ஏனைய தனியார் வைத்தியசாலை, தெல்தோட்டை மற்றும் ஆரேக்கர் வைத்தியசாலைகளுக்கும் செல்ல வேண்டுமென்றால் இப்பாலத்தை கடந்தே செல்ல வேண்டும். மேலும் கண்டி ஸ்ரீ ராமகிருஷ்ணா மத்திய கல்லூரி, பத்ராவதி பாடசாலை, கலைமகள் மற்றும் மலைமகள் போன்ற பாடசாலை மாணவர்களும் செல்கின்றனர்.
அதுமாத்திரமன்றி கலஹாவிலிருந்து பேராதனையூடாக கண்டி நகருக்கு செல்ல இருபத்தி ஏழு கிலோ மீட்டராகும். அதுவே கலஹாவிலிருந்து ஹந்தானையூடாக கண்டி செல்வதற்கு 17 கிலோ மீட்டர் தூரமே ஆகும். எனவே கண்டி செல்வதற்கு ஹந்தானை பாதையை பயன்படுத்துபவர்கள் இப்பாலத்தை கடந்து செல்ல வேண்டியுள்ளது.
இப்பாலம் சிதைவடைந்து காணப்படுவதன் காரணமாக இப்பாலத்தை பயன்படுத்தும் மக்கள் பல இன்னல்களுக்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தகுந்த அதிகாரிகள் இவ்விடயத்தை கவனத்தில் கொண்டு பாலத்தை புனர்நிர்மாணம் செய்யுமாறு கோருகின்றனர்.
ரமேஷ் ரெஜீனா










