” மலையகத்திற்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் நான் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய கண்டி மாவட்டத்திலுள்ள மாகாவலி மற்றும் எல்.ஆர்.சிக்கு கீழுள்ள இடங்களுக்கான காணி உறுதி பத்திரத்தை துரித கதியில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு குறிப்பிட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார் என்று கண்டி மாவட்ட வேட்பாளர் பாரத் அருள்சாமி தெரிவித்தார்.
இது தொடர்பில் பாரத் மேலும் கூறியதாவது,
பாராளுமன்றத் தேர்தலில் அரசாங்கத்தின் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாடு பூராகவும் விஜயம் மேற்கொண்டார். அதன்படி, மலையகத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதியிடம் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்த அறிக்கையொன்றை கடந்த 11 ஆம் திகதி கலஹாவில் வைத்து கையளித்திருந்தேன்.
அந்த அறிக்கையில் மலையக மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள காணிகளுக்கான உறுதிப்பத்திரம் வழங்கப்படாதிருப்பது குறித்த குறிப்பிட்டிருந்ததுடன், அவர்களுக்கான காணி உறுதிப்பத்திரத்தை விரைவாக பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கையை முன்னெடுக்குமாறும் ஜனாதிபதியிடம் கோரிக்கைவிடுத்திருந்தேன்.
அதன்படி, என்னுடைய கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் மாகாவலி மற்றும் எல்.ஆர்.சி இடங்களுக்கான காணி உறுதி பத்திரத்தை துரித கதியில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு குறிப்பிட்ட தரப்பினருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதற்கமைய கண்டி பிரதேசத்தில் அம்பகோட்ட, அளுத்வத்த, திகன, கலஹா, தெல்தோட்டை, புசல்லாவ, ரங்கலை, பன்வில, பல்லேகெல உள்ளிட்ட கண்டியில் ஏனைய மலையக பிரதேசங்களிலுள்ள காணிகளுக்கான உறுதிப்பத்திரம் துரித கதியில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் போலியான உறுதி பத்திரம் வழங்கி மக்கள் ஏமாற்றப்பட்டனர்.
இந்த நிலையில் நான் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட உறுதி பத்திரம் வழங்கப்படும். குறிப்பாக, நான் மனித வள அபிவிருத்தி நிலையத்தின் தலைவராக இருந்த போது அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பணிப்புரைக்கு அமைய எல்.ஆர்.சியுடன் இணைந்து காணி உறுதி பத்திரங்களை வழங்கினோம். அதேபோன்று, ஜனாதிபதியின் ஆலோசனையுடன் கண்டி பிரதேசங்களுக்கு துரித கதியில் காணி உறுதிபத்திரம் வழங்கப்படும்.” – என்றார்.
க.கிசாந்தன்